வவுனியா பாலமோட்டை ஓமந்தை மாதர்பணிக்கர்மகிழங்குளம் கனிஷ்ட உயர்தர வித்தியலாயத்தில் இன்று (03.04.2017) காலை பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள், பழையமாணவர்கள் ஒன்றிணைந்து தமது பாடசாலை அதிபரை இடம்பெற்றம் செய்யுமாறு கோரி பாடசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
குறித்த பாடசாலை அதிபர் தகாத வார்த்தைகளைப் பேசி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை அழைப்பதாகவும் இடம் நேரம் காலம் பார்க்காமல் தரைக்குறைவான வார்த்தைப் பிரயோகம் மேற்கொள்வதாகவும், காலை பிராத்தனை இடம்பெறும்போது தகுதி தராதரம் பார்க்காமல் பேசி மாணவர்களை அழைப்பதாகவும் உடனடியாக அதிபரை இடமாற்றம் செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இப் பாடசாலைக்கு ஓமந்தைப் பொலிசார், அப்பகுதி கிராம அலுவலகர் சென்று மாணவர்களை ஆர்ப்பாட்டத்தைக் கைவிடுமாறும் பேசி சமாதான முறையில் தீர்வு பெற்றுத்தருவதாகவும் தெரிவித்தனர். எனினும் மாணவர்கள் தமது ஆர்ப்பாட்டத்தை 12 மணிவரை மேற்கொண்டனர்.
பாடசாலைக்கு வவுனியா வடக்கு கல்விப்பணிப்பாளர் வி.ஸ்ரீஸ்கந்தராஜா சென்றதுடன் அதிபர், ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டார்.
பின்னர் ஓமந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுரேஸ் த சில்வா வலய கல்விப்பணிப்பாளர் மற்றும் அதிபருடன் கலந்துரையாடலை மேற்கொண்ட பின்னர் மாணவர்களை பாடசாலைக்குள் செல்லுமாறும் உரிய தீர்வு பெற்றுத்தருமாறு தெரிவித்ததையடுத்து மாணவர்கள் உட் சென்றனர்.
எனினும் பாடசாலை விடுமுறை 5ம் திகதியாகையால் உடனடியாக வலயப் பணிப்பாளர் எதுவும் செய்யமுடியாது, அதிபரை இடமாற்றுவதற்கு உடனடி சாத்தியமில்லை விடுமுறை ஆரம்பமாகும்போது உரிய கவனம் எடுத்து தீர்வு பெற்றுத்தருவதாக வாக்குறுதியளிக்கப்பட்டதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு வகுப்புகளுக்கு மாணவர்கள் சென்றனர்.
அதிபரின் செயற்பாட்டிற்கு பழைய மாணவர்கள், பெற்றோர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் அதிபரை இடமாற்றம் செய்யுமாறு கோரிய பதாதைகளுடன் மாணவர்கள் இன்றைய போராட்டத்தை மேற்கொண்டனர்