Showing posts with label வவுனியா NEWS. Show all posts
Showing posts with label வவுனியா NEWS. Show all posts

வவுனியாவில் இளைஞர்கள் குழுவினர் 6 பேருக்கு 10ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை!!


வவுனியாவில் 6பேர் கொண்ட இளைஞர் குழுவினருக்கு நேற்று வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் 10வருட கடூழிய சிறைத்தண்டனையும் தலா 10ஆயிரம் தண்டப்பணமும் செலுத்துமாறு தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு வவுனியா பூந்தோட்டம் பகுதிக்குச் சென்ற முச்சக்கரவண்டியினை வழிமறித்த பொலிசார் மேற்கொண்ட விசாரணையின்போது முச்சக்கரவண்டியில் பயணம் செய்த 6 இளைஞர்களை சோதனை மேற்கொண்டபோது வாள்கள், கத்திகள், பொல்லுகள் கைக்குண்டு என்பனவற்றுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.

 வழக்கு விசாரணைகள் இடம்பெற்றதையடுத்து பிணையில் செல்ல அனுமதிவழங்கப்பட்டது. சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்று வந்தது. நேற்றைய தினம் தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது முச்சக்கரவண்டியில் அபாயகரமான ஆயுதங்களை தமது உடமையில் வைத்திருந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டு குறித்த 6 பேரடங்கிய இளைஞர் குழவினருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேருக்கே 10வருட கடூழியச்சிறைத்தண்டனையும் தலா 10ஆயிரம் ரூபா தண்டப்பணமும் செலுத்தமாறு தீர்ப்பு வழங்கப்பட்டது.
 வழக்குத் தொடுநர் தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் வழக்கினை நெறிப்படுத்தியிருந்தார். தீர்ப்பு வழங்கியவுடன் எதிரிகளின் உறவினர்கள் நீதிமன்றத்திற்கு வெளியே அமர்ந்திருந்து அழுது புலம்பிக்கொண்டிருந்தபோது பொலிசார் சென்று அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தியிருந்தனர்.
வவுனியாவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் : குற்றவாளிகள் நீதிபதியை தண்டிப்பதா என மக்கள் கேள்வி!!

வவுனியாவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் : குற்றவாளிகள் நீதிபதியை தண்டிப்பதா என மக்கள் கேள்வி!!



வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்ப்பாட்டில் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (16.06.2017) காலை 10.30 மணியளவில் வடக்கு முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இவ் ஆர்ப்பாட்டத்தின் போது குற்றவாளிகள் நீதிபதியை தண்டிப்பதா, எதிர்கட்சிகளோடு கூட்டு தமிழ் மக்களுக்கு வேட்டு, நல்லாட்சி அரசாங்கத்தின் சகுனிகளே வெளியே போ, , இளைஞர்கள் புரட்சி மக்கள் எழுச்சி விக்கி வெற்றி, மக்கள் தெருவில் மாகாணசபை திமிரில், எதிர்கட்சிகளோடு ஒப்பந்தம் மக்களுக்கு தீப்பந்தம் என பல்வேறு வாகசங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;

இப் போராட்டத்தில் முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான செந்தில்நாதன் மயூரன், ம.தியாகராசா, இ.இந்திரராசா, ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா மாவட்ட பொது அமைப்பின் பிரதிநிதிகள், வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் , முச்சக்கரவண்டி சாரதிகள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இப் போராட்டமானது சுமார் ஒரு மணிநேரம் மேற்கொள்ளப்பட்டதுடன் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.


வவுனியா புனித அந்தோனியார்ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!(படங்கள்,வீடியோ)

.

வவுனியா புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று முன்தினம் 04.06.2017 ஞாயிற்றுக்கிழமை ஆலய பங்குதந்தை அருட்பணி சத்தியராஜ் அடிகளார்  தலைமையில் கொடியேற்றதுடன் ஆரம்பமானது ..

மேற்படி திருவிழா 04.06.2017 தொடக்கம் 13.06.2017 வரை பத்து தினங்கள் இடம்பெறுகின்றது .. திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தை சூழவுள்ள பகுதிகள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தான மகோற்சவம் (படங்கள் ,வீடியோ)

வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்தின்  வருடாந்த மகோற்சவம்கடந்த  31.05.2017 புதன் கிழமை காலை 10.00 மணியளவில்   மகோற்சவகுரு சிவஸ்ரீ  செல்வ சர்மில குருக்கள் தலைமையில் கொடியேற்றதுடன்  ஆரம்பமாகியது .

கடந்த மூன்று தினங்களாக  இடம்பெற்ற  உற்சவநிகழ்வுகள் தொடர்பான  காட்சிகள்..


வவுனியாவில் கடும்காற்றுடன் கூடிய மழை : கார் ஒன்று சேதம், முறிந்து விழுந்த மரங்கள்!!



வவுனியாவில் இன்று (24.05.2017) மதியம் முதல் பெய்துவரும் கடும் காற்றுடன் கூடிய மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
வவுனியா நகரம், பட்டானிச்சூர், குருமன்காடு, வேப்பங்குளம், நெளுக்குளம், குழுமாட்டுச்சந்தி போன்ற வவுனியாவில் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.
இதன்காரணமாக மன்னார் வீதி குருமன்காட்டு சந்தியில் வீதியோரத்திலிருந்த பழமைவாய்ந்த மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் மன்னார் – வவுனியா வீதிக்கான போக்குவரத்தும் தடைப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் உடனடியாக உரிய அதிகாரிகளுடன் தொலைபேசியில் தொடர்பினை ஏற்ப்படுத்தி சுமார் ஒருமணிநேர போராட்டத்தின் மத்தியில் மரம் வெட்டி அகற்றப்பட்டது
மற்றும் வவுனியா இலுப்பையடிசந்தியிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பாதையில் அமைந்துள்ள பழமைவாய்ந்த மரமொன்று கார் மீது வீழ்ந்ததில் கார் பகுதியளவில் சேதமடைந்ததுடன் உயிர்ச்சேதங்கள் எவையும் ஏற்ப்படவில்லை
இவ் கடும் காற்றுடன் கூடிய மழையின் காரணமாக வவுனியாவில் பல்வேறு இடங்களில் மின்சார கம்பிகள் அறுந்துள்ளதாகவும் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.


வவுனியாவில் வெசாக் அலங்கார வடிவமைப்புக்களை பார்வையிட திரண்ட மக்கள்!!

A9 வீதியில் மூன்று முறிப்பு சந்தியிலிருந்து வவுனியா மாவட்ட செயலகம் வரையான பகுதியில் 100க்கு மேற்ப்பட்ட வெசாக் கூடுகள் தொங்கவிடப்பட்டுள்ளன. அத்துடன் வவுனியா போதி தக்ஸினாராம விகாரைக்கு முன்பாக பல வெசாக் கூடுகளை பொலிஸார் வடிவமைத்து பொதுமக்களின் பார்வைகளுக்காக வைத்துள்ளனர்.
இதனை பார்வையிடுவதற்காக மூன்றுமுறிப்பு பகுதியிலிருந்து வவுனியா நகரம் வரை ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.
வவுனியா நகரின் பல இடங்களிலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள வெசாக் அலங்கார வெளிச்சக் கூடுகளை பார்வையிட வரும் பொதுமக்களுடைய பாதுகாப்பு கருதி இரவு முழுவதும் நகரில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியா பொலிஸ் நிலையத்தில் தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி சோமரத்ன விஜயமுனி தலைமையில் பொதுமக்களுக்கு கடலை தானமாக வழங்கப்ட்டது.
வன்னி பிராந்திய பொலிஸ்மா அதிபர் காரியலாயத்தில் கலை நிகழ்வுகள், தாக சாந்தி நிலையங்கள், குளிர்பானங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


வவுனியாவில் யானை ஒன்று சுட்டுக் கொல்லப்படும் அதிர்ச்சி காட்சிகள்


வவுனியா ஒமந்தை கொம்புவைத்தகுளத்தில் இன்று (17.04.2017) காலை 8.30 மணிக்கு கிணற்றில் வீழ்ந்து கிடந்த இரண்டு யானைகள் மீட்கப்பட்டன.

நேற்றைய தினம் (16.04) இரண்டு குட்டி யானைகளும் இரண்டு பெரிய யானைகளும் கிணற்றிள் வீழ்ந்திருந்த நிலையில் ஒமந்தை கொம்புவைத்தகுளத்தில் நான்கு யானைகள் கிணற்றில் வீழ்ந்துள்ளதாக வவுனியா ஒமந்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வன விலங்கு ஜீவரசிகள் அதிகாரிகளுக்கு தகவலை வழங்கினார்கள்.

ஆனால் மாலை 4 மணியாகியும் வன விலங்கு ஜீவராசிகள் அதிகாரிகள் சமூகமளிக்காமையினால் பொதுமக்களின் உதவியுடன் ஒமந்தை பொலிஸார் சுமார் 5 மணித்தியாளங்களாக போராடி இரண்டு குட்டி யானைகளை மீட்டெடுத்தனர்.

எனினும் இரவில் தொடர்ச்சியாக மீட்புப் பணியினை தொடர முடியாமையினால் இன்று காலை இரு பெரிய யானைகளும் கிணற்றினுள் உயிருக்கு போராடிய நிலையில் பெக்கோ கனகரக வாகனத்தின் உதவியுடன் மீட்கப்பட்டது.

மீட்க்கப்பட்ட யானைகளில் ஒன்று பெக்கோ கனகரக வாகனத்தை தாக்கியதுடன் அதில் இருந்தவர்களை தாக்க முற்பட்ட சமயம் வனத்துறை அதிகாரியினால் சுட்டுக்கொல்லப்பட்டது.

மற்றையா யானை கடும் போராட்டத்தின் மத்தியில் மீட்க்கப்பட்டு காட்டிற்குள் விரட்டியடிக்கப்பட்டது.

வவுனியா தாண்டிக்குளம் ஸ்ரீ கந்தசாமி கோவிலில் திருட்டு!!



வவுனியா தாண்டிக்குளம் ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தில் நேற்று (16.04.2017) இரவு திருடர்கள் ஆலயத்தின் உண்டியலை உடைத்து பெருமளவு பணத்தினைத் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

நேற்று (16.04) மாலை 6 மணியளவில் ஆலயத்தினை மூடிவிட்டுச் சென்றதாகவும் இன்று காலையில் ஆலய வழிபாடுகளை மேற்கொள்ளச் சென்றபோது ஆலயம் உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது இதையடுத்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.
ஆலயத்திற்கச் சென்ற பொலிஸ் குழுவினர் ஆலய நிர்வாக சபையினரிடமும் ஆலய குருக்களிடமும் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்போது ஆலய மூலஸ்தானம் கத்தி கொண்டு உடைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது தெரியவந்துள்ளதுடன் ஆலயத்தின் அலுவலகத்தினை திருடர்கள் உடைத்து அலுமாரிகளை உடைத்து அதிலிருந்த பெறுமதிமிக்க ஒலிபெருக்கிச் சாதனத்தினை திருடர்கள் எடுத்துச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது
ஆலய முன்றலிலிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணமும் திருடப்பட்டுள்ளது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் கிணற்றில் விழுந்த 3 யானைகள் மீட்பு : அதிகாரியை தாக்க முயன்ற யானை சுட்டுக்கொலை!!


வவுனியா ஒமந்தை கொம்புவைத்தகுளத்தில் நேற்று (16.04.2017) காலை 8.30 மணிமுதல் இரண்டு குட்டியானைகளும் இரண்டு பெரிய யானைகளும் கிணற்றிள் வீழ்ந்து உயிருக்குப் போராடி வந்தன. ஒமந்தை கொம்புவைத்தகுளத்தில் நான்கு யானைகள் கிணற்றில் வீழ்ந்துள்ளதாக வவுனியா ஒமந்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வன விலங்கு ஜீவரசிகள் அதிகாரிகளுக்கு தகவலை வழங்கினார்கள். ஆனால் மாலை 4 மணியாகியும் வன விலங்கு ஜீவராசிகள் சழூகமளிக்காமையினால் பொதுமக்களின் உதவியுடன் ஒமந்தை பொலிஸார் சுமார் 5 மணித்தியாளங்களாக போராடி இரண்டு குட்டி யானைகளை மீட்டெடுத்தனர். இதன் போது மீட்டெ டுக்கப்பட்ட குட்டியானையொன்று அவ்விடத்தில் நின்ற பொலிஸ் உத்தியோகத்தர்களையும் பொதுமக்களையும் தாக்க முற்ப்பட்டது. இதன் போது இருவர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர். எனினும் இரவில் தொடர்ச்சியாக மீட்பு பணியினை தொடர முடியாமையினால் தற்போது இரு பெரிய யானைகளும் கிணற்றினுள் உயிருக்கு போராடிய நிலையில் இம் மீட்புப் பணி இன்று (17.04.2017) காலை தொடர்ந்தது. இம் மீட்புப் பணியில் மேலும் ஒரு யானை உயிருடன் மீட்கப்பட்டதுடன் மற்றுமொரு யானை காப்பாற்ற முயன்ற அதிகாரியை தாக்கியதால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அந்த யானை பரிதாபமாக பலியானதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

வவுனியாவில் இடியுடன் கூடிய கடும் மழை : மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு!!

வவுனியாவில் இன்று (11.04.2017) மாலை 3.30 மணிமுதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகின்றது.
வவுனியா நகரம், பட்டானிச்சூர், குருமன்காடு, வேப்பங்குளம், நெளுக்குளம், குழுமாட்டுச்சந்தி போன்ற வவுனியாவில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகின்றது.
மழையுடன் வீசிய கடும் காற்றினால் மக்களின் காணி வேலிகள் சிலவும் சேதமடைந்துள்ளது.
மேலும் தொடர்ச்சியாக மழை பெய்யுமானால் வவுனியா திருநாவற்குளம் மக்களின் வீடுகளுக்கு வெள்ளநீர் உட்புகும் நிலைமை காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் பதட்டம்: இரு குழந்தைகளை காப்பாற்றிய ஊடகவியலாளர்கள்!

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் நடமாடும் சேவை ஒன்று பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இன்று(08.04.2017) நடாத்தப்பட்டது.
வவுனியாவில் மாவட்ட செயலகத்தின் வழிகாட்டலுடன், வவுனியா பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட ‘நில மெகவர’ ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடமாடும் சேவை நடாத்தப்பட்டது.
இந் நடமாடும் சேவையில் வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களைச்சேர்ந்த பொது மக்கள் அடையாள அட்டை, பிறப்பு, விவாக மற்றும் மரணச் சான்றிதழ்கள், சாரதி அனுமதி பத்திரம், ஒய்வூதிய திணைக்கள சேவைகள், வீட்டுக் கடன் பெற்றுக்கொள்ளல், முதியோர் அட்டைகள் பெற்றுக்கொள்ளல், காணி உரிமம், வேலைவாய்ப்பு, சமுர்த்தி ஓய்வூதிய கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற்றுக்கொள்ள வந்திருந்தனர்.
நடமாடும் சேவை நடைபெறும் இடத்தில் பெருமளவான மக்கள் நீண்ட வரிசையில் முண்டியடித்தபடி கொழுத்தும் வெய்யிலில் தங்கள் தேவைகளை நிறைவேற்ற காத்திருப்பதை காணக்கூடியதாக இருந்தது.
அத்துடன் வயதானவர்கள் சிறுவர்கள் மக்கள் நெரிசலில் தத்தளித்த நிலையில் கூட்டத்தில் சிக்கிய இரண்டு குழந்தைகளை ஊடகவியலாளர்கள் காப்பாற்றி அவர்களின் பெற்றோர்களிடத்தில் ஒப்படைத்த சம்பவம் இடம்பெற்றது.
அத்துடன் நடமாடும் சேவை நடைபெற்ற இடத்தில் மக்களை சரியாக ஒழுங்குபடுத்தல் இல்லாத நிலையில் அதிகாரிகளால் மக்களின் ஆவணங்களை சரிபார்க்க முடியாத நிலை காணப்பட்டதுடன், அதிகாரிகள் சேவை வழங்கிய மேசை கதிரை போன்ற தளபாடங்கள் தள்ளி விழுத்தப்பட்ட நிலையில் பொலிசாரால் ஆவணங்கள் அள்ளிச் செல்லப்பட்டதை காணக்கூடியதாக இருந்தது.
மக்கள் முண்டியடித்ததன் காரணமாக பாடசாலையின் பிரதான வாயில் இழுத்து மூடப்பட்ட நிலையில் ஊடகவியலாளர் வவுனியா உதவி பிரதேச செயலாளர் திருமதி சாரதா கர்ணனிடம் விளக்கம் கேட்ட நிலையில் மக்களுக்கான அனைத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளது. மக்கள் முண்டியடிப்பதன் காரணமாக நிலைமையை சமாளிக்க முடியாதுள்ளது என தெரிவித்தார்.

வவுனியா இறம்பைக்குளம் கருமாரி ஸ்ரீ நாகபூசணி ஆலய பங்குனி உத்தரமும் தீமிதிப்பும்

வவுனியா இறம்பைக்குளம்  கருமாரி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய பங்குனி  உத்தரமும் தீமிதிப்பு நிகழ்வும் நேற்று  (09.04.2017 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
காலையில் பக்தர்கள் வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் இருந்து பாற்குட பவனியாக ஹொரவப்பொத்தான வீதி ஊடாக ஆலயத்தை வந்தடைந்தனர்.
பிற்பகல் அபிசேகம் வீதி உலா என்பன இடம்பெற்று மாலை தீமிதிப்பு உற்சவம் இடம் பெற்றது. காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதிக்கும் உற்சவத்தில் பங்கு பற்றியிருந்தனர்.
அம்பாள் வசந்த மண்டப பூஜையின் பின் உள்வீதி வெளிவீதி சிம்ம வாகனத்தில் வலம்வந்து ஆலயத்துக்கு முன்புறம் தீமிதிப்புக்ககாக தயார் செய்யபட்ட பகுதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாட்சி வழங்க தயாரான நிலையில் அம்பாளின் பக்தர்கள் கடும் நெருப்பு கொண்ட குழியை தமது நேர்த்திகளை நிறைவேற்ற அருள்புரியுமாறு அம்பாளை வேண்டிபாடி தீமிதித்து சென்றனர் .
வருடாந்தம் நடைபெறும் இந்நிகழ்வில் காப்பு கட்டி விரதமிருந்த அடியார்களே தீமிதிப்புக்கு அனுமதி வழங்கபடுவது வழமையாகும்.

வவுனியா சின்னடம்பனில் லைக்கா ஞானம் கிராமம் மக்களிடம் கையளிப்பு!


லைக்கா ஞானம் அறக்கட்டளையினால், வவுனியா சின்ன அடம்பன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள லைக்கா ஞானம் கிராமத்தின் 150 வீடுகள், பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
லைக்கா ஞானம் அறக்கட்டளையின் தலைவர் திருமதி. ஞானாம்பிகை அல்லிராஜா, நிறுவுனர் திரு. சுபாஸ்கரன் அல்லிராஜா ஆகியோர் இணைந்து பயனாளிகளிடம் தற்போது வீடுகளைக் கையளித்தனர்.
அவர்களைத் தவிர பிரதம விருந்தினர்கள், விசேட அழைப்பாளர்கள் என பலர் கலந்துகொண்டு, மக்களுக்கான வீடுகளைக் கையளித்னர். குறித்த 150 வீடுகளும் சுமார் 23 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
லைக்காக ஞானம் அறக்கட்டளையானது வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதோடு, பல்வேறு மனிதாபிமான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(2ஆம் இணைப்பு)
லைக்கா ஞானம் அறக்கட்டளையினால், வவுனியா சின்ன அடம்பன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள லைக்கா ஞானம் கிராமத்தின் 150 வீடுகள், பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக, லைக்கா ஞானம் அறக்கட்டளையின் தலைவர் திருமதி. ஞானாம்பிகை அல்லிராஜா, நிறுவுனர் திரு. சுபாஸ்கரன் அல்லிராஜா உட்பட பிரதம விருந்தினர்கள், விசேட அழைப்பாளர்கள் என சகலரும் அங்கு சென்றுள்ளனர்.
சுமார் 23 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, 150 வீடுகளைக் கொண்ட லைக்கா கிராமத்தை கைளிக்கும் நிகழ்வினை முன்னிட்டு சின்ன அடம்பன் மற்றும் பரிசங்குளம் ஆகிய பகுதிகள் விழாக் கோலம் பூண்டுள்ளன.
லைக்கா ஞானம் அறக்கட்டளையானது வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதோடு, பல்வேறு மனிதாபிமான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றது.
லைக்கா ஞானம் அறக்கட்டளையின் தலைவர் திருமதி ஞானாம்பிகை அல்லிராஜா, ஸ்தாபகத் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா ஆகியோரின் பரந்துபட்ட மனிதாபிமான செயற்பாடுகளில் ஒன்றாகவே, இந்த கிராமம் மக்களுக்கு கையளிக்கப்பட்டது.
இலங்கையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு பல தாசாப்த காலமாக பூந்தோட்டம் உள்ளிட்ட முகாம்களில், பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த மக்களுக்கே, லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் இந்த வீடுகள் வழங்கிவைக்கப்பட்டது.
வவுனியா பூந்தோட்டம் நலன்புரி முகாமில் கடந்த 25 ஆண்டு காலமாக அடிப்படை வசதிகளற்ற நிலையில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த மக்களின் வீட்டுத் தேவையினை பூர்த்தி செய்து வைக்கும் வகையில் லைக்கா ஞானம் அறக்கட்டளை, சின்ன அடம்பன் பகுதியில் 150 வீடுகள் அடங்கிய இந்த புதிய கிராமத்தை அமைத்துள்ளது.
குறித்த கிராமத்தில் சிறுவர்களுக்கான பூங்கா, இளைஞர்களுக்கான விளையாட்டு மைதானம், சமூக அபிவிருத்தி மையம், ஆன்மீக வணக்கஸ்தலங்கள் உள்ளிட்ட அத்தியாவசியமான சகல விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
லைக்கா ஞானம் கிராமத்தின் 150 வீடுகளை கையளிப்பதற்கான ஆயத்தங்கள் பூர்த்தி
அத்தோடு, பயனாளிகளும் விருந்தினர்களும் தற்போது அவ்விடத்திற்கு வருகை தந்துகொண்டிருப்பதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
லைக்காக ஞானம் அறக்கட்டளையானது வடக்கு கிழக்கில் பல்வேறு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதோடு, பல்வேறு மனிதாபிமான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றது.
தற்போது, கடந்த கால அனர்த்தங்களினால் வாழ்விடங்களை இழந்தவர்களுக்கு வீடுகளை இலவசமாக வழங்கவுள்ளமையானது, லைக்கா ஞானம் அறக்கட்டளையின் பணிகளில் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளதென சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் 12ஆம் நாள் உற்சவம் வேட்டை திருவிழா !!


வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் பன்னிரெண்டாம்   நாளான நேற்று   06.04.2017 வியாழகிழமை  அன்று  வேட்டை திருவிழா உற்சவம் இடம்பெற்றது.
உற்சவதினத்தன்று  மாலை ஐந்தரை  மணிக்கு ஆலயத்தில் இருந்து குதிரை வாகனத்தோடு ஊர்வலமாக புறப்பட்ட அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் வெளிகுளம் சித்திவிநாயகர் ஆலயத்தில் மாலை ஐந்தரை மணியளவில் வேட்டையை முடித்துக்கொண்டு  மீண்டும்  வெற்றி களிப்போடு கொரவபொத்தான  வீதி ஊடாக  ஊர் முழுதும் பூரண கும்பங்கள்  வைக்கப்பட்டு எம்பெருமான் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் வரவேற்கப்பட்டார்.

 பக்த அடியார்களின்  வேண்டுதல்கள் காணிக்கைகளை பெற்று கொண்டும் அடியார்களுக்கு அருள் பாலித்த வண்ணமும் ஆலயத்தை மாலை ஏழு மணியளவில் வந்தடைந்த பின்னர் பிராயசித்த அபிசேகம் இடம் பெற்று வழமைபோல் தம்பபூசை  அசந்த மண்டப பூசையுடன் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் ஆகியோர் உள் வீதி வெளிவீதி வலம் வந்து இரவு பத்து மணியளவில் திருவிழா நிறைவுபெற்றது .

வவுனியாவில் பாடசாலை அதிபரை இடமாற்றக்கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!!


வவுனியா பாலமோட்டை ஓமந்தை மாதர்பணிக்கர்மகிழங்குளம் கனிஷ்ட உயர்தர வித்தியலாயத்தில் இன்று (03.04.2017) காலை பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள், பழையமாணவர்கள் ஒன்றிணைந்து தமது பாடசாலை அதிபரை இடம்பெற்றம் செய்யுமாறு கோரி பாடசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
குறித்த பாடசாலை அதிபர் தகாத வார்த்தைகளைப் பேசி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை அழைப்பதாகவும் இடம் நேரம் காலம் பார்க்காமல் தரைக்குறைவான வார்த்தைப் பிரயோகம் மேற்கொள்வதாகவும், காலை பிராத்தனை இடம்பெறும்போது தகுதி தராதரம் பார்க்காமல் பேசி மாணவர்களை அழைப்பதாகவும் உடனடியாக அதிபரை இடமாற்றம் செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இப் பாடசாலைக்கு ஓமந்தைப் பொலிசார், அப்பகுதி கிராம அலுவலகர் சென்று மாணவர்களை ஆர்ப்பாட்டத்தைக் கைவிடுமாறும் பேசி சமாதான முறையில் தீர்வு பெற்றுத்தருவதாகவும் தெரிவித்தனர். எனினும் மாணவர்கள் தமது ஆர்ப்பாட்டத்தை 12 மணிவரை மேற்கொண்டனர்.
பாடசாலைக்கு வவுனியா வடக்கு கல்விப்பணிப்பாளர் வி.ஸ்ரீஸ்கந்தராஜா சென்றதுடன் அதிபர், ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டார்.
பின்னர் ஓமந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுரேஸ் த சில்வா வலய கல்விப்பணிப்பாளர் மற்றும் அதிபருடன் கலந்துரையாடலை மேற்கொண்ட பின்னர் மாணவர்களை பாடசாலைக்குள் செல்லுமாறும் உரிய தீர்வு பெற்றுத்தருமாறு தெரிவித்ததையடுத்து மாணவர்கள் உட் சென்றனர்.
எனினும் பாடசாலை விடுமுறை 5ம் திகதியாகையால் உடனடியாக வலயப் பணிப்பாளர் எதுவும் செய்யமுடியாது, அதிபரை இடமாற்றுவதற்கு உடனடி சாத்தியமில்லை விடுமுறை ஆரம்பமாகும்போது உரிய கவனம் எடுத்து தீர்வு பெற்றுத்தருவதாக வாக்குறுதியளிக்கப்பட்டதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு வகுப்புகளுக்கு மாணவர்கள் சென்றனர்.
அதிபரின் செயற்பாட்டிற்கு பழைய மாணவர்கள், பெற்றோர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் அதிபரை இடமாற்றம் செய்யுமாறு கோரிய பதாதைகளுடன் மாணவர்கள் இன்றைய போராட்டத்தை மேற்கொண்டனர்

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின்மூன்றாம் நாள் கற்பக விருட்ச காட்சி உற்சவம்!!




வவுனியா கோவில் குளம் அகிலாண்டேஸ்வரம் எனப்போற்றப்படும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின்  வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் மூன்றாம்  நாளான நேற்று  28-03 -2017 செவ்வாய்கிழமை   காலை முதல் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கமலேஸ்வர  குருக்கள் தலைமையில் அபிசேகங்கள் நடை பெற்று மதியம் எம் பெருமான் திரு வீதியில் காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய திருக்காட்சி இடம்பெற்று பகல் திருவிழா நிறைவு பெற்றது.
மீண்டும்  மாலை கற்பகதரு காட்சிக்குரிய  அலங்காரங்கள் அபிசேகங்கள்மாலை 4.30மணிக்கு  ஆரம்பமாகி வசந்தமண்டப பூஜையின் பின் மாலை ஏழு மணியளவில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்  கற்பகதருக்காட்சி கொண்டு காமதேனு வாகனத்திலும் விநாயகர் மூஷிக வாகனத்திலும் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் மயில் வாகனத்திலும்  திருவீதி உலா வந்த நிகழ்வு  இடம்பெற்று திருவிழா இனிதே நிறைவு பெற்றது.



வவுனியா செட்டிகுளத்திற்கான பேரூந்து சீரில்லை : அரச ஊழியர், மாணவர் ஆர்ப்பாட்டம்!!

<

வவுனியாவிலிருந்து செட்டிகுளம் செல்லும் இ.போ.ச சாலை பேருந்துகள் சீரில்லை மற்றும் நேரகாலத்திற்குச் செல்வதில்லை என்று தெரிவித்து இன்று (29.03.2017) காலை 7.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியாவிலிருந்து செட்டிகுளம் செல்லும் பேருந்து குறித்த நேரத்திற்குள் செல்வதில்லை. வவுனியாவில் இருந்து 7மணிக்குச் செல்லும் பேருந்து 9 மணிக்கு செட்டிகுளம் செல்கின்றது. இதனால் அரச ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள் தமது கடமைகளை எவ்வாறு சரியாக மேற்கொள்ளமுடியும்?
பாடசாலை செல்லும் மாணவர்கள் சில பாடங்கள் முடிந்த பின்னரே பாடசாலை செல்லவேண்டி எற்பட்டுள்ளது. அதேபோல் அரச ஊழியர்களும் குறித்த நேரத்திற்குள் அலுவலகத்திற்குச் செல்லமுடியவில்லை. இது தொடர்பாக பல தடவைகள் இ.போ.ச. சாலைக்குத் தெரியப்படுத்தியிருந்தோம் எமது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலும் இது தொடர்பாக தெரியப்படுத்தியிருந்தோம்.
நேரக்கணிப்பாளர் அலுவலகத்திலிருக்கும் தொலைபேசியில் அழைப்பு ஏற்படுத்த முடியாது. வரும் அழைப்பை மட்டுமே பெறமுடியும். பேருந்து வந்தால் செல்லும் என்றும் நேரக்கணிப்பாளர் தெரிவித்துள்ளார். எமக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. அதன் காரணமாகவே இன்று போராட்டம் மேற்கொள்ளவேண்டி ஏற்பட்டுள்ளது என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறு இன்று மத்திய பேருந்து நிலையத்தில் அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டபோது செட்டிகுளத்திற்கு திடீரென ஒரு பேருந்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டவர்களை விட்டுவிட்டுச் சென்றுள்ளது. அரச ஊழியர்கள் துரத்திச் சென்றும் பேருந்து நிற்காமல் சென்றதைக்காணக்கூடியதாக இருந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இது தொடர்பாக மனு ஒன்றை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் இன்று கையளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதேவேளை செட்டிகுளம் பகுதியில் பேருந்து நிலையத்தில் பாடசாலை அதிபர் தலைமையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. இவ் ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் கிராமசேவையாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் கொடியேற்றம்-2017




இலங்கையின் ஆறாவது ஈஸ்வர தலமாக விளங்குகின்ற அகிலாண்டேஸ்வரத்தில் அதாவது இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் வருடாந்தமகோற்சவத்தின் சிவன் உற்சவம்நேற்று 26-03-2017 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ  கமலேஸ்வர குருக்கள் அவர்கள் தலைமையில் கொடிஏற்றதுடன் ஆரம்பமானது.

வவுனியாவில் கடும் வெயில்! சூடுபிடித்துள்ள இளநீர், தர்ப்பூசணிப் பழங்களின் வியாபாரம்!


வவுனியாவில் தற்போது கடும் வெயிலுடன் கூடிய காலநிலையே நிலவுகின்றது. வெளியில் செல்ல முடியாத அளவில் வெப்பமான காலநிலை நிலவுகின்றது.

 அந்த வகையில் வவுனியாவில் மக்கள் உடல் சூட்டினை தணித்து கொள்வதற்காக பலரும் இளநீர், தர்ப்பூசணிப் பழம் போன்றவற்றை வாங்கி சாப்பிடுவதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. வவுனியாவில் இளநீர் ஒன்று எண்பது ரூபா தொடக்கம் நூறு ரூபா வரைக்கும், தர்ப்பூசணிப் பழம் ஒரு கிலோ எண்பது ரூபாவிற்கும் விற்பனையாகின்றது. செயற்கைக் குளிர்பானங்கள் பணத்தை மட்டுமல்ல உடல் நலத்தையும் கெடுத்துவிடும்.

இயற்கை தந்த வரமாய் இளநீர் இருக்க குளிர்பானங்கள் தேவையற்றது. இளநீரின் விலையைப் போலவே அது தரும் பலன்களும் அதிகம். இளநீரில் இருக்கும் இனிப்பான விடயங்கள் யாதெனில் இளநீர் நம் தாகத்தைத் தணித்துப் புத்துணர்ச்சி அளிக்கிறது. விட்டமின்கள், தாது உப்புக்கள், என்சைம்கள், அமினோ அமிலங்கள், சைட்டோகைனின் ஆகியவை அதில் அதிக அளவு இருக்கின்றன.

வவுனியா நோக்கி பயணித்த வாகனம் கோர விபத்து : சாரதி சம்பவ இடத்திலேயே பலி!(வீடியோ)




இன்று (20.03.2017) மாலை 4.30 மணியளவில் பூணாவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
ரம்பாவ பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பட்டா ரக வாகனமே இவாறு மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் பட்டா வாகனத்தின் சாரதி ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
கல்குனாமடு பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய அபல் தாரக்க சஞ்சீவ விமலசேன என்பவரே பலியான சாரதி என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்தானது சாரதி தூக்க மயக்கத்தில் மரத்துடன் மோதியதால் இடம்பெற்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.